ஜெய்பீம் திரைப்பட விமர்சனம்

 ஒரு திரைப்படம் மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிறிதும் நினைத்து கூட பார்க்கவில்லை. அம்மாதிரியான ஒரு தாக்கத்தை #ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. 

இப்படம் ஒடுக்கப்பட்ட இருளர்/ பழங்குடியினர் வாழ்வியலோடும், காதலோடும் துவங்குகிறது, அத்துடன் சாதி இந்துக்கள் அவர்களை நடத்தும் விதத்தையும் விவரிக்கிறது. பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பழங்குடியினரின் நாதியற்ற நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது. காவல்துறை அதிகாரிகளின் சித்திரவதைகள், சிறைக் கொலைகள் (lock up death) #விசாரனை படத்தின் இன்னொரு கோர முகத்தை காட்டுகிறது. படத்தில் பிரகாஷ்ராஜ் தவிர்த்து, மற்ற காவல்துறை அதிகாரிகளை பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு கோபமும், வெறுப்பும் தானாகவே எழுகிறது. இவ்வளவு மோசமான காவல்துறை அதிகாரிகளின் கையில் சட்டம், ஒழுங்கு இருப்பது நமக்குள் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் #பிரகாஷ்ராஜ் போல ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகள் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. வழக்கறிஞராக வரும் சூர்யா கம்யூனிஸ்ட்டாக வருகிறார், அவரின் போராட்ட குணமும், வழக்குகளின் தரவுகளை சேகரிப்பதையும் இயக்குனர் சுவாரஸ்யமாக காட்சிபடுத்தியுள்ளார். இறுதியில் வழக்கை எப்படி வென்றெடுக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்துகிறது. அனைவரின் நடிப்பும் அவ்வளவு எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரங்களின் அழுத்தம் நெஞ்சை இறுக்கமாக்குகிறது, வசனங்கள் ஒவ்வொன்றும் தீயாக அநீதியின் கண்ணத்தில் அறைவதுபோல் உள்ளது. சில முட்டாள்கள் இயக்குனர்கள் தனது ஜாதி பெருமையை காப்பாற்ற இன்னொரு ஜாதியை இழிவாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரித்து படமெடுக்கும்போது,  சமூகத்தில் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்களின் நீதிக்காக அவர்கள் பின்னால் நிற்பதே  அறம் என்பதை இயக்குனர் #ஞானவேல் மற்றும், நடிகர் #சூர்யா இருவரும் நிரூபித்துள்ளனர். இம்மாதிரியான விளிம்பு நிலை மக்களின் கதையை படமாக நடித்து தயாரித்தற்க்காக #சூர்யாவை கொண்டாட வேண்டும். இக்கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகவே முன்னாள் உயர்நீதிமன்ற  நீதிபதி திரு. #சந்துரு அவர்கள் நிஜ வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் கதாநாயகன் என்பதை பலர் அறிந்து கொள்ளமுடிகிறது.  இப்படிப்பட்ட படங்கள் இந்திய சமுதாயத்தில் காலத்தின் தேவை. பட்டியல்/ பழங்குடி மக்களின் வலி, வன்மம், நிராகரிப்பு, தியாகம், பசி, வறுமை, படிப்பறிவின்மை, நிலமின்மை, வேலைவாய்ப்பு,  வாழ்வாதாரம் அல்லாத, வீடில்லாத, அதிகாரம் அல்லாத, பொய் வழக்குகள், சிறை தண்டனை, சிறைக்கொலைகள், அங்கிகாரம் அற்ற நிலை, அரசியல் எழுச்சியற்ற நிலை போன்ற அனைத்தும் பொதுத்தளத்தில் பேசப்பட வேண்டும். ஒரு மனிதன் ஜாதி, மதம், மொழி இனம் கடந்து மனிதனாக மதிக்கப்பட வேண்டும்.  படம் நிச்சயம் விருது பெறும். இப்படம் என் மனதை உலுக்கிவிட்டது. நெஞ்சில் மிகுந்த கணத்துடன் நகர்கிறேன். நிச்சயம் இதன் தாக்கத்திலிருந்து மீள சில நாட்கள் கூட ஆகும்.

Comments